மின் கசிவால் பட்டாசு வெடித்து வீடு சேதம்
இடைப்பாடி, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், கோரணம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன், 51; தீபாவளிக்கு உரிய அனுமதி பெற்று எட்டிக்குட்டைமேட்டில் பட்டாசு கடை நடத்தினார். இதில் மீதியான பட்டாசுகளை, அவரது மாமனார் மாரிமுத்துவின் தார்சு வீட்டில் வைத்திருந்தார். அங்கு யாரும் வசிக்கவில்லை.நேற்று காலை, 7:30 மணிக்கு மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில், பட்டாசு ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து சிதறின. இதனால் அருகில் வசித்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இடைப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில், 60,000 ரூபாய் மதிப்பிலான பட்டாசு வெடித்து சேதமாகி விட்டது. வீட்டின் கதவு, ஜன்னல் சேதமானது. மொத்த சேத மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது. கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.