சுவாமியை வைத்து வழிபட இடம் கேட்டு நுாற்றுக்கணக்கானோர் மனு
சேலம், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது, இடித்து அகற்றப்பட்ட குலதெய்வமான வீரபத்ரசாமியை வைத்து வழிபட, அரசு புறம்போக்கு இடம் கேட்டு நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:வாழப்பாடி, காட்டுவேப்பிலைப்பட்டி சேசன்சாவடியில், இந்து ஆதிதிராவிடர் 3வது வார்டில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகே ஆற்றங்கரை ஓரத்தில் பல தலைமுறைகளாக குலதெய்வமான வீரபத்ரசாமியை வைத்து வழிபட்டு வந்தோம். நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது, வீரபத்ரசாமியை இடித்து அகற்றி விட்டனர். அதற்கு பதிலாக, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேற்கே அரசுக்கு சொந்தமாக, 1 ஏக்கர் பாறை புறம்போக்கு நிலம் உள்ளது. இது ஆதிதிராவிடர் தெருவுக்கு மிக அருகில் உள்ளதால், எங்கள் குல தெய்வம் வீரபத்ரசாமியை வைத்து வழிபட, இந்த இடத்தில் நிலம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.இவ்வாறு கூறினர்.