உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கைது

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கைது

பெத்தநாயக்கன்பாளையம்: நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, வில்வனுார் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு, 36, விவசாயி. கடந்த, 14 ஆண்டுகளுக்கு முன்பு சாவித்ரி, 33, என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 2019ல், வெளிநாடு சென்ற சேட்டு, 2021ல், சொந்த ஊருக்கு வந்தார். அப்போது, மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், அவரை பிரிந்து சென்று விவசாய தோட்டத்தில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி இரவு, 7:00 மணியளவில் தனது குழந்தைகளுக்கு புதிதாக எடுத்த துணிகளுடன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, மனைவி சாவித்ரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சேட்டு, மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின், ஏத்தாப்பூர் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சேலத்தை சேர்ந்த போலீஸ் விஜய ஆனந்த் என்பவருடன், சாவித்ரிக்கு திருமணம் நடந்தது. அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, 14 ஆண்டுகளுக்கு முன், சேட்டுவை திருமணம் செய்தார். வெளிநாட்டுக்கு சேட்டு சென்றபோது, மனைவிக்கு தவறான தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. 2022 முதல், இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நடத்தையில் சந்தேகம் தொடர்பாக மீண்டும் ஏற்பட்ட தகராறில், சாவித்ரியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !