மேலும் செய்திகள்
12 கிலோ குட்கா விற்றவர் கைது
24-Dec-2024
ஓசூர்,:ஓசூர் அருகே, மனைவி தலையை பிளாஸ்டிக் கவரால் மூடி கழுத்தறுத்து கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள சூடாபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார், 45; பெயின்டர். இவரது மனைவி கல்பனா, 38. அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு ஸ்வேதா, 20, என்ற மகளும், சேத்தன்குமார், 19, என்ற மகனும் உள்ளனர். ஸ்வேதாவிற்கு திருமணமாகி விட்டது. சேத்தன்குமார் ஐ.டி.ஐ., படித்து வருகிறார். ஆனந்தகுமார் வீட்டு செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் மனைவி நடத்தையிலும் ஆனந்தகுமாருக்கு சந்தேகம் இருந்துள்ளது. நேற்று மாலை மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், கல்பனாவின் தலையை திடீரென பிளாஸ்டிக் கவரால் மூடி, தன்னிடம் இருந்த சிறிய பிளேடால் அவரது கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்பனா, சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனந்தகுமார் அங்கிருந்து தலைமறைவானார். வீட்டிற்கு வந்த அவரது மகன் சேத்தன்குமார், தனது தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பாகலுார் போலீசார் கொலை வழக்குப்பதிந்து, தலைமறைவான ஆனந்தகுமாரை தேடி வருகின்றனர்.
24-Dec-2024