தென்னைக்கு நுண்ணுாட்டம் வைத்தால் பிஞ்சு கொட்டாது
பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டியில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவுக்கு, 'அட்மா' திட்டத்தில், ரபி பருவ பயிர் சாகுபடி பயிற்சி நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் தலைமை வகித்தார்.அதில் பனமரத்துப்பட்டி வட்டார துணை வேளாண் அலுவலர் ராமு பேசுகையில், ''வட்டாரத்தில், 490 ஹெக்டேரில் தென்னை, 160 ஹெக்டேரில் பாக்கு மரங்கள் உள்ளன. விவசாயிகள் பாக்கு, தென்னை மரங்களுக்கு தொழு உரம் மற்றும் உரங்கள் மட்டுமே வைக்கின்றனர். ஓராண்டுக்கு இருமுறை நுண்ணுாட்டம் வைத்தால், பாக்கு, தென்னை மரங்களில் உற்பத்தியாகும் பிஞ்சுகள் (குரும்பை) கொட்டாது. அதிக உற்பத்தி, தரமான பாக்கு, தேங்காய் கிடைக்கும்,'' என்றார்.கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து, உதவி வேளாண் அலுவலர் சின்னதுரை விளக்கினார். அதேபோல், 'அட்மா' தொழில் நுட்ப மேலாளர் சுமித்ரா, தோட்டக்கலை உதவி அலுவலர் செந்தில்குமார், வேளாண் வணிக துறை உதவி அலுவலர் சுதிர், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரேணுகா உள்ளிட்டோரும், விவசாயி களுக்கு விளக்கம் அளித்தனர். வேப்பங்கன்று உள்ளிட்ட செடிகள் வழங்கப்பட்டன. 40 விவசாயிகள் பயனடைந்தனர்.