அ.தி.மு.க., தொண்டர்களை தட்டினால் ஓரணியில் இணைந்து விடுவார்கள்
ஓமலுார், ''அ.தி.மு.க., தொண்டர்களை தட்டினால், 'ஓரணியில்' இணைந்து விடுவார்கள். இதுதான் தற்போது, அ.தி.மு.க.,வின் நிலை,'' என, தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி பேசினார்.ஓமலுாரில், தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:'ஓரணியில் தமிழ்நாடு' திட்டம் தாய்மக்களுக்கான திட்டம். 4 ஆண்டுகளில் ஒரு குடும்பம், 50,000 ரூபாய் பயன் பெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி, இ.பி.எஸ்., பேசக்கூடாது. அன்று செங்கோட்டையன் இல்லையென்றால், இ.பி.எஸ்., உள்ளே சென்றிருப்பார். மகன், மாமனாருக்காக, அ.தி.மு.க.,வை, அமித்ஷாவிடம் அடகு வைத்துவிட்டார் இ.பி.எஸ்.,அ.தி.மு.க., தலைவர்கள், எங்களுக்கு வேண்டாம். ஏற்கனவே பல தலைகள், இங்கே உண்டு. அ.தி.மு.க., தொண்டர்களை தட்டினால், 'ஓரணியில்' இணைந்து விடுவார்கள். இதுதான் தற்போது, அ.தி.மு.க.,வின் நிலை. முருகன் மாநாட்டில், ஈ.வெ.ரா., - அண்ணாதுரையை அவமானப்படுத்தினர். அதே மாநாட்டில், பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், வேலையும், முருகனையும் வைத்து, 'நாங்கள் தி.மு.க.,வை வீழ்த்திவிடுவோம்' என பேசினார். அந்த வேலு(அமைச்சர் எ.வா.வேலு), அந்த முருகன்(சீனியர் அமைச்சர் துரைமுருகன்) ஆகியோர், எங்களுடன் உள்ளனர். அதை விட, ஆறுபடை வீடுகளான அந்த தொகுதி, ஐந்திலும், தி.மு.க., தான் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து முருகன் ஆசிர்வாதமும் எங்களுக்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.ஓமலுார் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சுகவனம், ஒன்றிய செயலர் ரமேஷ் பங்கேற்றனர்.