வன உரிமை சட்டப்படி 956 தனி நபர் பட்டா வழங்கல்
சேலம்சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வன உரிமை சட்டம் குறித்து, வருவாய், வனம், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட அளவில் பயிலரங்கம், கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடந்தது.இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:வன உரிமை சட்டப்படி சேலம் மாவட்டத்தில், 956 தனிநபர் பட்டாக்கள், 70 கிராம வன குழுக்களுக்கு சமுதாய வன உரிமை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வன கிராமங்களில், 18 வயதுக்கு மேற்பட்டோரை உறுப்பினர்களாக கொண்டு, கிராம சபைகளை உருவாக்க வேண்டும். இதன்படி பழங்குடிகள், இதர இனங்களை சேர்ந்தவர்கள், வனப்பகுதியில் வசித்ததற்கான ஆவணங்களை கொடுத்தால், கிராம சபை ஒப்புதலுடன் அனுப்பப்படும். வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., ஆய்வு செய்து, மேல் நடவடிக்கைக்கு, ஆர்.டி.ஓ., தலைமையில் குழுவுக்கு அனுப்பப்படும்.வன கிராமம் உள்ளே, வெளியே பாரம்பரியமாக சேகரிக்கப்படும் பொருட்களை உபயோகித்துக்கொள்ளவும், பிறருக்கு கொடுப்பதற்கான உரிமையையும், சமுதாய வன உரிமை பட்டா மூலம் பெறலாம். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், பழங்குடி கிராம சபைகளை கூட்டி வன உரிமை சட்டத்தை செயல்படுத்துவது, வன உரிமை குழுக்கள் அமைப்பது, வனப்பகுதியில், 3 தலைமுறையாக அல்லது 75 ஆண்டாக வசிக்கும் பழங்குடியினர் அல்லது மற்ற இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனிநபர் வன உரிமை வழங்க வேண்டிய ஏற்பாடு குறித்து, மாவட்ட அளவில் அதிகாரிகளுக்கு, பயிலரங்கில் ஆலோசனை வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.இதில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பொன்மணி, டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஆர்.டி.ஓ.,க்கள் அபிநயா, பிரியதர்ஷினி, உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம் உள்பட பலர் பங்கேற்றனர்.