உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் 4 மணி நேரம் கொட்டிய மழை ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் பெய்தது

சேலத்தில் 4 மணி நேரம் கொட்டிய மழை ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் பெய்தது

சேலம்: சேலம் உள்பட, 15 மாவட்டங்களில், 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே சூரிய வெளிச்சம் குறைந்து மேகமூட்டமாக காட்சியளித்தது. இரவு, 7:20 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை, இடி, மின்னல், காற்று என எந்த இடையூறும் இன்றி, அமைதியாக தொடர்ந்து, 4 மணி நேரமாக கொட்டியது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து தேங்கியது. குறிப்பாக புது பஸ் ஸ்டாண்ட் முழுதும் மழைநீர் வெளியேற வழியின்றி குளம் போல் மாறி பயணியர் சிரமத்துக்குள்ளாகினர். பனமரத்துப்பட்டி, மல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் மித மழை பெய்தது. இரவில் மழையில் நனைந்த படியே தொழிலாளர்கள், அரளி பூ பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஏற்காட்டில் நேற்று மதியம், 3:00 மணிக்கு சாரல் மழையாக பெய்ய தொடங்கி, 3:40 மணி வரை பெய்தது. தொடர்ந்து மாலை, 5.05 மணிக்கு ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மித மழை பெய்து, இரவு, 7:10 மணிக்கு ஏற்காடு முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது. தொடர்ந்து மழையும் பெய்ததால், சற்று துாரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் குளிரின் தாக்கம் அதிகரித்தது.வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. பின் மாலையில் மீண்டும் பெய்தது. ஆத்துார் அதன் சுற்று வட்டார பகுதிகளான நரசிங்கபுரம், தாண்டவராயபுரம், அம்மம்பாளையம், பைத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை, இடி, மின்னலுடன், கன மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை