உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கருணாநிதி பிறந்தநாள்: அமைச்சர் மரியாதை

கருணாநிதி பிறந்தநாள்: அமைச்சர் மரியாதை

சேலம் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102வது பிறந்த நாள் விழா, சேலத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், 4 ரோடு அண்ணா பூங்காவில் நேற்று கொண்டாடப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து, அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து, மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். பின் திரண்டிருந்த கட்சியினர், மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மேயர் ராமச்சந்திரன், மாநகர் செயலர் ரகுபதி, மண்டல குழு தலைவர்கள் உமாராணி, தனசேகர், அசோகன், பகுதி செயலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, சேலம் உருக்காலை, 1வது கேட் முன், தொ.மு.ச., சார்பில், கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உருக்காலைக்கு வித்திட்ட கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும்படி, அவரது, 'கட்-அவுட்' வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் ராஜேந்திரன், கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்தார். உழவர் சந்தைசேலம், சூரமங்கலம் உழவர் சந்தையில் மூத்த விவசாயி மாதேஸ்வரன் தலைமையில் பலர், உழவர் சந்தைகளை உருவாக்கிய கருணாநிதி படத்துக்கு, மாலை அணிவித்து காய்கறி, பழங்கள் படையலிட்டு, மலர்துாவி மரியாதை செலுத்தினர். சந்தைக்கு வந்த மக்களுக்கு காய்கறி, கீரை, இனிப்பு வழங்கினர். அதேபோல் அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உழவர் சந்தைகளிலும் கருணாநிதி பிறந்தநாளை, விவசாயிகள் கொண்டாடினர்.சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், தாரமங்கலத்தில், சேலம் எம்.பி., செல்வகணபதி தலைமையில், நகர செயலர் குணசேகரன், ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர், கட்சி அலுவலகம் அருகே, கருணாநிதி வெண்கல சிலைக்கு மலர் துாவினர்.ஆத்துாரில் நகர செயலர் பாலசுப்ரமணியம்; கெங்கவல்லியில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை; பனமரத்துப்பட்டியில், தி.மு.க., நகர செயலர் ரவிக்குமார்; கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம்; ஓமலுாரில், கிழக்கு ஒன்றிய செயலர் ரமேஷ்; தீவட்டிப்பட்டியில், ஒன்றிய செயலர் அறிவழகன் தலைமையில் கட்சியினர், மலர் துாவி மரியாதை செலுத்தினர். சேலம் பெரியார் பல்கலையில் துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் சுப்பிரமணி தலைமையில் பேராசிரியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள், கருணாநிதி படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, 'ஆய்வாளர்கள் நோக்கில் கலைஞர்' தலைப்பில் ஆய்வரங்கம் நடந்தது.700 பேருக்கு பிரியாணிஆத்துார் நகராட்சி, 11வது வார்டை சேர்ந்த, தி.மு.க., செயலர் வேல்முருகன். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் நகர துணை செயலராக உள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, நேற்று மாலை, புவனேஸ்வரி, 700 பேருக்கு, 'சிக்கன்' பிரியாணி, முட்டை வழங்கினார். நகர செயலர் பாலசுப்ரமணியம், பொருளாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர்கள் சம்பத், பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து புவனேஸ்வரி கூறுகையில், ''தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்து தொழில் செய்கிறோம். கருணாநிதி உயிருடன் இருந்தபோது, எங்கள் பிறந்த நாள், திருமண நாளில் நேரில் சென்று ஆசீர்வாதம் பெற்று வருவோம். தற்போது அவரது பிறந்த நாளை கொண்டாடி, 700 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ