| ADDED : ஜன 16, 2024 11:32 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே கூலமேடு ஜல்லிக்கட்டு விழா நடப்பாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கூலமேடு கிராமம் உள்ளது. இங்கு, 70 ஆண்டுகளுக்கு மேலாக, பொங்கல் விழாவை முன்னிட்டு, ஜன., ௧௭ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. விழாவில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், நாமக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து, 500 முதல், 800 காளைகள் பங்கேற்கும். ஆனால், நடப்பாண்டு விழா நடக்கவில்லை.இதுகுறித்து கூலமேடு ஊராட்சி தலைவி வெள்ளையம்மாள் கூறியதாவது:கூலமேடு கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டு, அதற்கான கட்டுமான பணி முடியாமல் உள்ளது.இந்தாண்டு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய விருப்பதால், ஜல்லிக்கட்டு விழாவை நடத்தவில்லை. அடுத்த ஆண்டு வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடக்கும்.அதேசமயம் ஆண்டுதோறும் செலவு அதிகரித்து வருவதால், விழாவை அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக, வரும் கிராமசபை கூட்டத்தில் மக்களிடம் கருத்து கேட்டறிந்து, தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு மனு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஜல்லிகட்டுவிழா நடக்கும் என நினைத்து, காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்து வந்தனர். ஆனால் விழா நடக்காததால், அவர்கள் ஏமாற்றத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.