மணல் குவாரிகளை திறக்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்கக்கோரி, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.அதில் துணை தலைவர் பழனிசாமி பேசியதாவது:தமிழகத்தில், 2 ஆண்டாக மணல் குவாரிகளை திறக்காததால், 5 லட்சம் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 சதவீத கட்டுமான தொழில் முடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் செம்மண், செங்கல் சூளை மண், கிராவல், மொரம்பு அள்ள, 2 ஆண்டாக அனுமதி வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக சேலம் கனிமவள உதவி இயக்குனர் முதல், கனிமவள இயக்குனர் வரை புகார் அளித்தும் பலனில்லை. மாவட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இருந்த நிலையில், தற்போது, 500க்கும் குறைவாகி, லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதற்கு தமிழக அரசே காரணம். அதனால் மணல் குவாரிகளை திறக்கவும், செம்மண் உள்ளிட்டவைக்கு அனுமதி கேட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.செயலர் கண்ணையன் பேசுகையில், ''முறைகேடு காரணமாகவே, மாவட்டத்தில், 'பர்மிட்' நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை தவிர்க்க, சங்க நிர்வாகிகளுக்கு செம்மண், கிராவல், சூளை மண் அள்ள ஒப்பந்தம் அளிக்க வேண்டும்,'' என்றார்.மாவட்ட பொருளாளர் சந்திரன், துணை செயலர் செல்வம், தலைமை நிலைய செயலர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.