சிறுவனை மலம் அள்ள வைத்தவர் வன்கொடுமை சட்டத்தில் கைது
ஓமலுார்: 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை தாக்கி, மலத்தை அள்ள வைத்த புகாரில், வன்கொடுமை சட்டத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, கொங்குபட்டி காலனியை சேர்ந்தவர் சுரேஷ், 41, கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா, 31. தம்பதிக்கு மகன், இரு மகள்கள் உள்ளனர். அதில் மகன் பவித்ரன் , 15, கொங்குபட்டி அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட அச்சிறுவன், நேற்று காலை, அருகே உள்ள தோட்டத்தில், மலம் கழித்து விட்டார். இதை, தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ரமேஷ், 51, என்பவர் பார்த்தார். தொடர்ந்து சிறுவனை வெளியே விடாமல், தோட்டத்தில் உள்ள அறையில் வைத்து பூட்டினார். இதை அறிந்த சிறுவனின் பெற்றோர், அங்கு சென்று, ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மகனை மீட்டனர். இதையடுத்து, அந்த சிறுவனின் பெற்றோர், தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், 'என் மகனை தா க்கி, கையால் மலத்தை அள்ளச்செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தனர். போலீசார், வன்கொடுமை சட்டத்தில் ரமேஷை கைது செய்தனர்.