67 ஆண்டுகளுக்கு பின் ஜூனில் நிரம்பிய மேட்டூர் அணை
மேட்டூர்: மேட்டூர் அணையின், 92 ஆண்டு கால வரலாற்றில், 67 ஆண்டுகளுக்கு பின், ஜூனில் அணை நிரம்பியது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாகும். கடந்த, 12ல் அணை நீர்மட்டம், 114 அடி, நீர் இருப்பு, 85.58 டி.எம்.சி.,யாக இருந்தது.அன்றைய தினம் அணையில் இருந்து டெல்டா குறுவை சாகுபடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நீரை திறந்து வைத்தார். அதன்பின், கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பின.அந்த அணைகளில் இருந்து உபரிநீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால், நேற்று மாலை, 6:00 மணிக்கு மேட்டூர் அணை முழு கொள்ளளவான, ௧௨௦ அடியை எட்டி, ௪௦வது முறையாக நிரம்பியது. இதையடுத்து, 16 கண் மதகு வழியாக, 58,000 கன அடி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது.வழக்கமாக மேட்டூர் அணை, ஜூலை, ஆகஸ்ட், செப்., அக்., போன்ற மாதங்களில் தான் நிரம்பும். முன்னதாக, 1957ல் ஜூன், 11ல் அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு ஜூன் மாதம் அணை நிரம்பியதில்லை. இந்நிலையில், 67 ஆண்டுகளுக்குப் பின், ஜூன் மாதத்தில் அணை நேற்று நிரம்பியது.உபரிநீர் திறக்கப்படும், 16 கண் மதகில், 19 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இதில், முதற்கட்டமாக, 1, 2, 3வது மதகு துாண்களை பலப்படுத்தும் பணி நடப்பதால், நான்காவது மதகையும் திறக்க முடியாது. இதனால், 12 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.