உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆசிரியர்களே இரண்டாவது பெற்றோர் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

ஆசிரியர்களே இரண்டாவது பெற்றோர் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

இளம்பிள்ளை, இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், புது வகுப்பறை கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் தலைமை வகித்து பேசியதாவது:சொந்த குழந்தைகளை விட, வகுப்பு மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என செயல்படுபவர் உங்கள் ஆசிரியர். அவர்களே, உங்களின் இரண்டாவது பெற்றோர். நல்ல மதிப்பெண் பெறுவதைவிட, ஒழுக்கமான மாணவர்கள் என, பெயர் எடுக்க வேண்டும். அதுதான் பெருமை.'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்துக்கு, முதல்வர், அவரது சொந்த பணத்தில், 5 லட்சம் ரூபாய் அளித்தார். தற்போது, 658.67 கோடி ரூபாய் நம்மை தேடி வந்துள்ளது. முதல்வர் அதிக நிதியை கல்வி துறைக்கு ஒதுக்கியுள்ளார். மாணவர்களாகிய நீங்கள், படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்றவற்றுக்கு நாங்கள் இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்று நோக்கு செயலி, முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்பு, இளந்தளிர் இலக்கியம், மாதிரி பள்ளிகள், தகைசால் பள்ளிகள், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதை மாணவர்கள் பயன்படுத்தி, எதிர்காலத்தில் மென்மேலும் உயர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சேலம் எம்.பி., செல்வகணபதி, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.'புதரை அகற்ற வேண்டும்'முன்னதாக அமைச்சர் மகேஷிடம், முன்னாள் மாணவர்கள் மனு அளித்தனர். அதில், 'இப்பள்ளி மைதானத்தில், ௫ அடி அளவில் கோரைப்புற்கள் வளர்ந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் உலா வருவதால், மாணவர்கள் அச்சத்துடன் விளையாடும் அவலநிலை உள்ளது. புதரை அகற்றி, மைதானத்தை சுற்றி நடைமேடை அமைக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி