மாயமான முதியவர் சடலமாக மீட்பு
பெத்தநாயக்கன்பாளையம்: ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 60. இவரது மனைவி நீலா, 58. இவர்கள் குடும்பத்துடன், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முருகன் கோவிலுக்கு, கடந்த டிச., 29ல் வந்தனர். மீண்டும் வீட்டுக்கு புறப்படும்போது சுந்தரமூர்த்தி மாயமானார். இதுகுறித்து டிச., 31ல் நீலா, ஏத்தாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை, அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டம் அருகே, அடையாளம் தெரியாத உடல், அழுகிய நிலையில் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று, உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இரு மாதங்களுக்கு முன் மாயமான சுந்தரமூர்த்தி என தெரியவந்தது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். விவசாய தோட்டம் அருகே சென்றபோது மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.