உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பருவ மழையால் மகசூல் பாதிப்பு வரத்து சரிந்து காய்கறி விலை உயர்வு

பருவ மழையால் மகசூல் பாதிப்பு வரத்து சரிந்து காய்கறி விலை உயர்வு

ஆத்துார், பருவ மழையால் காய்கறி மகசூல் பாதிக்கப்பட்டதால், அதன் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளது.சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை பகுதிகள் மட்டுமின்றி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் காய்கறி, கீரை, பழங்கள் உள்ளிட்டவை, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்கின்றனர். அங்கு கடந்த வாரத்தை விட காய்கறி விலை, கிலோவுக்கு, 20 முதல், 30 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்துள்ளது.இதுகுறித்து மொத்த வியாபாரி சீனிவாசன் கூறியதாவது:பருவ மழையால் கத்தரி, வெண்டை, புடலங்காய், மிளகாய், பீர்க்கங்காய் போன்ற காய்கறி பூக்கள் உதிர்ந்து அழுகிவிட்டன. முள்ளங்கி ஈரப்பதத்தில் அழுகல் ஏற்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ, 40க்கு விற்ற கத்தரிக்காய், இன்று(நேற்று) மார்க்கெட்டில், 70 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 80 ரூபாயாக உள்ளது. கிலோ வெண்டைக்காய், 40 முதல், 50 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 60 ரூபாய்; முருங்கைக்காய், 100 முதல், 120 ரூபாய், வெளிமார்க்கெட்டில், 150 ரூபாயாக உயர்ந்துள்ளது.கிலோ, 20 ரூபாயாக இருந்த முள்ளங்கி, 70 முதல், 80 ரூபாய்; 20 ரூபாயாக இருந்த, காலிபிளவர், 50; பீர்க்கன்காய், 60 முதல், 70; பாகற்காய், 60; அவரை, 100 முதல், 120 ரூபாய் என, விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ