சொத்து கேட்டு மகன், மகள் மிரட்டல் ஆதரவின்றி தாய் கண்ணீர்
சேலம், சேலம் குகை, தொல்காப்பியர் தெருவை சேர்ந்த மூதாட்டி காவேரியம்மாள், 78, நேற்று இவர் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:எனது கணவர் அங்கப்ப நாயக்கர், 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அதனால், இளைய மகன் லோகநாதன், 50, திருமணம் செய்து கொள்ளாமல், ஆட்டோ ஓட்டி அவரது பாதுகாப்பில் என்னை பராமரித்து வருகிறார். அதே பகுதியில் எனக்கு, 1,600 சதுரடியில், சிறிது சிறிதாக 6 குடியிருப்புகள் அடுத்தடுத்து உள்ளன. அதன் வாடகையை எனக்கு தராமல் மகள் சம்பூரணம், 65, அபகரித்து கொண்டார். அதேபோல, 1,600 சதுரடி காலி நிலத்தை மூத்த மகன் விஸ்வநாதன், 67, அபகரித்து கொண்டார்.ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்யும் அவர், நிலத்தை அவரது பெயருக்கு கிரயம் செய்து தர கேட்டு, அடிக்கடி கொலை மிரட்டல் விடுப்பதுடன், கொடுமைப்படுத்துகிறார். அதேபோல மகளும், 6 வீடுகளை எழுதிதர கேட்டு, மிரட்டி வருவதால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆட்டோ தொழிலில் லோகநாதனுக்கு சொற்ப வருமானமே கிடைப்பதால், சாப்பாடுக்கே கஷ்டமாக உள்ளது. இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார், மூத்த மகன், மகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, உயிருக்கு பயந்து வாழ வேண்டி இருப்பதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.