உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முள்ளுவாடி ரயில்வே கேட் மூடப்பட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் துவக்கம்

முள்ளுவாடி ரயில்வே கேட் மூடப்பட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் துவக்கம்

சேலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், முள்ளுவாடி ரயில்வே கேட் மூடப்பட்டு, மேம்பாலம் கட்டும் பணிகள் நேற்று துவங்கின.சேலத்தில் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் சேலம் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், ரயில்கள் வந்து செல்லும் போது கேட் மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முள்ளுவாடி பகுதியில் செரி ரோடு, பிரட்ஸ் ரோடு என இரண்டு ரயில்வே கேட் சந்திப்புகளிலும் இதே நிலை இருந்தது. கடந்தாண்டு செரி ரோடு சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டி வாகனங்கள் தண்டவாள பகுதியை பாலத்தில் ஏறி கடந்து செல்வதால் அங்கு ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது. பிரட்ஸ் சாலை சந்திப்பில் விபத்துகளை தவிர்க்க, 72 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. கடந்த செப்., 17 மற்றும் 23 முதல் இப்பகுதி ரயில்வே கேட் மூடப்பட்டு பணிகள் துவங்கும் என இரண்டு முறை அறிவிப்பு வெளியான நிலையில், ஆயுத பூஜை தினமான நேற்று கேட் மூடப்பட்டு, மேம்பால துாண்கள் அமைக்க பள்ளம் தோண்டும் பணிகள் துவங்கியுள்ளது.கட்டுமான பணிகள் முடியும் வரை, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் வாகனங்கள் திருவள்ளுவர் சிலை வழியாக சுகவனேஸ்வரர் கோவில் முன் மேம்பாலத்தில் ஏறி தொங்கும் பூங்கா வழியாகவும், இதே போல் தொங்கும் பூங்கா பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலம் வழியாக ஏறி செரிரோடு திருவள்ளுவர் சிலை வழியாக வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை