ஆலைகளுக்கு கிடுக்கி; வரி வசூலிக்கும் நகராட்சி
மேட்டூர்: மேட்டூர், கருமலைக்கூடல் அருகே, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில், தொழிற்பேட்டை உள்ளது. அங்கு மெக்னீசியம் சல்பேட் உரம் தயாரிப்பு உள்பட, 212 ஆலைகள் உள்ளன. அந்த ஆலைகள், மேட்டூர் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். தற்போது, 158 நிறுவனங்கள், 27 லட்சம் ரூபாய் நிலுவை வைத்திருந்தது. அந்த நிறுவனங்கள், சொத்து வரியை செலுத்தக்கோரி, நகராட்சி நிர்வாகம் இறுதி நோட்டீஸ் கொடுத்தும் பலனில்லை.நேற்று முன்தினம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளிட்ட அதிகாரிகள், சிட்கோ வளாகம் சென்றனர். தொடர்ந்து வரி செலுத்தாத நிறுவனங்கள் நுழைவாயில் முன், பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி, ஆலைக்குள் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுத்தனர்.இரண்டாம் நாளாக, நேற்றும் இப்பணி நடந்தது. இதையடுத்து, 5 நிறுவனங்கள், 6 லட்சம் ரூபாய் சொத்து வரியை செலுத்தின. நிலுவை வைத்துள்ள இதர நிறுவனங்களிடம் வரி வசூலிக்க, இன்று நடவடிக்கை எடுக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.