விடுமுறை உத்தரவை மீறி செயல்பட்ட 4 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
சேலம், டிச. 14-------சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் இதை மீறி சில தனியார் பள்ளிகள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில்(தனியார் பள்ளிகள்) ஆய்வு செய்தார். அதில் விடுமுறை உத்தரவை மீறி, சேலம், மேச்சேரியில் தலா ஒன்று, வாழப்பாடியில் இரண்டு தனியார் பள்ளிகள் செயல்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து விளக்கம் கேட்டு, 4 பள்ளிகளின் நிர்வாகத்துக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாளில் ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.