கருக்கலைப்பு செய்த விவகாரம்நர்ஸ் உறவினர்களிடம் விசாரணை
சேலம்:சேலம் மாவட்டம், கருப்பூரில் கர்ப்பிணிகளுக்கு பாலினத்தை கண்டறிந்து, கருக்கலைப்பில் ஈடுபடுவதாக வந்த தகவலின் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சேலம் மாவட்ட சுகாதார அலுவலர்கள் சவுண்டம்மாள், யோகானந்த் மற்றும் மருத்துவ குழுவினர் கடந்த, 4ல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, கோட்டகவுண்டம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது, அந்த வீட்டில் கர்ப்பிணிகளுக்கு பாலினத்தை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கருக்கலைப்பில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை நர்சுகள் சுகன்யா, கலைவாணி ஆகியோரை கருப்பூர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளியான வாழப்பாடியை சேர்ந்த நர்ஸ் கனகாவை போலீசார் தேடி வருகின்றனர்.அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக, கருப்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவல்படி, தனிப்படை போலீசார் கனகாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னைக்கு சென்ற போலீசார், கனகாவை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.