குறைதீர் கூட்டத்தில் பட்டமாக பறந்த மனு
சேலம், சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் பார்த்திபன், 40. இவர் கோரிக்கை மனு எழுதி, அதை பட்டமாக செய்து, கலெக்டர் அலுவலகம் வந்தார்.பின், கலெக்டர் அலுவலகம் எதிரே, கோரிக்கை மனு பட்டத்தை பறக்கவிட்டபடி, அங்குள்ள தியாகிகள் ஸ்துாபியை வலம் வந்தார். அதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. அத்துடன், அதை வேடிக்கை பார்க்க திரண்ட கூட்டத்தால், வாகனங்கள் ஸ்தம்பித்தது. இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் பட்டத்தை பறிமுதல் செய்தனர்.பார்த்திபன் கூறுகையில், ''சேலம் சீலநாயக்கன்பட்டியில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. அதை சரி செய்ய பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.கலெக்டர் ஆபீசில் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் சம்பிரதாயத்துக்காக நடக்கிறது.மக்களின் கோரிக்கை மனு காற்றில் பறக்கும் காகிதமாகிவிட்டது. அதை நினைவுப்படுத்தவே மனுவை பட்டமாக்கி பறக்க விட்டேன்,'' என்றார். பின் போலீசார் அறிவுரை கூறி, மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.