விவசாய நிலத்தில் குழாய் பதிப்பு போலீஸ் பாதுகாப்புடன் தொடக்கம்
சங்ககிரி,சங்ககிரி, தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டி, சீரங்ககவுண்டம்பாளையத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள, 7 பேர், நெடுங்குளம் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கம் மூலம், காவிரி ஆற்றில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அரசு அனுமதி பெற்று, குழாய் பதிப்பு பணியை, 4 ஆண்டுக்கு முன் தொடங்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், முறைகேடாக குழாய் அமைப்பதாக கூறி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட, 7 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் உத்தரவுப்படி, நேற்று முன்தினம் மின்மாற்றிகள், அதன் கம்பங்கள் பதிக்கப்பட்டன. அப்போதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நில அளவீடு செய்யப்பட்டது. நேற்று, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், விவசாய நிலத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து குழாய் பதிப்பு பணி தொடங்கியது.