உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டியரை கொன்று நகை கொள்ளை: கொடூரனை சுட்டுப்பிடித்தது போலீஸ்

மூதாட்டியரை கொன்று நகை கொள்ளை: கொடூரனை சுட்டுப்பிடித்தது போலீஸ்

சங்ககிரி: இரு மூதாட்டியரை கொன்று, நகைகளை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி சுட்டு பிடிக்கப்பட்டார். சேலம் மாவட்டம், இடங்கணசாலை அருகே, இ.காட்டூரை சேர்ந்த மாரிமுத்து மனைவி பாவாயி, 70. இவர், நவ., 3ல் ஆடு மேய்க்க சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. அதே நாளில், அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மனைவி பெரியம்மாள், 75, என்பவரும் காணாமல் போனார். மகுடஞ்சாவடி போலீசார் இருவரையும் தேடினர். மறுநாள், பாவாயிக்கு சொந்தமான குட்டையில், இரு மூதாட்டியரும் சடலமாக மிதந்தனர். சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது, அவர்கள் அணிந்திருந்த தங்க தோடுகள், வெள்ளி கால் சங்கிலிகள் மாயமாகி இருந்தன. அதேநேரம், குட்டை, அதை ஒட்டிய, 3 ஏக்கர் விவசாய நிலத்தை, பாவாயி குடும்பத்தினரிடம் இருந்து, குத்தகைக்கு விவசாயம் செய்து வந்த, ஓமலுார் அருகே காமலாபுரம், கிழக்கத்திகாட்டை சேர்ந்த அய்யனார், 55, தலைமறைவானது தெரிந்தது. அவர் மீது சந்தேகம் எழவே, அவரை பிடிக்க, சேலம் ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்று அதிகாலை, சங்ககிரி அருகே ஒருக்காமலை அடிவாரத்தில் பதுங்கியிருந்த அய்யனாரை பிடிக்க போலீசார் சென்றனர். அவர் தப்ப முயன்று, மகுடஞ்சாவடி எஸ்.ஐ., கண்ணனின், வலது தோள்பட்டையில் கத்தியால் வெட்டினார். இதனால் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரது கைத்துப்பாக்கியால், அய்யனாரின் வலது முட்டிக்காலில் சுட்டார். காயமடைந்த கண்ணன், அய்யனார், சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அய்யனார், மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதற்கு முன், ஓமலுார், கட்டிக்காரனுாரை சேர்ந்தவர் நரேஷ்குமார், 32, மூதாட்டி காதுகளில் உள்ள தோடுகளை பறித்த வழக்கில் மே, 24ல், சங்ககிரி மலை அடிவார பகுதியில், வலது முட்டிக்காலில் துப்பாக்கியால் சுட்டு, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அய்யனார் கொலை செய்ய உதவிய, இடங்கணசாலை, இ.காட்டூர் டிராக்டர் டிரைவர் பூபதி, 53, என்பவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.

மூதாட்டியர் மீது 'குறி'

 அய்யனார் 2003 முதல், ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் சரித்திர பதிவேடு குற்றவாளி  2000ம் ஆண்டு ஓமலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு மூதாட்டியை பலாத்காரப்படுத்தி கொன்ற வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்டார்  2000ம் ஆண்டு ஓமலுாரில் ஒரு மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்டார்  2000ம் ஆண்டில் ஓமலுாரில் மேலும் ஒரு மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்டார்  2004ல் ஓமலுாரில், 65 வயது மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்றார். அதே ஆண்டு, ஓமலுாரில், 55 வயது மூதாட்டியை கொன்று, நகைகளை கொள்ளையடித்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். இந்த இரு வழக்குகளிலும் சிறையில் இருந்த அய்யனார், 2018 செப்., 21ல், முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
நவ 08, 2025 13:50

இத்தனை வழக்கில் மாட்டியிருக்கார். எப்பிடி விடுதலை பண்ணீங்க?


VRM
நவ 08, 2025 13:32

பொதுமக்களின் வாழ்வில் எப்படி எப்படி விளையாடி இருப்பது தெரியும்.


புதிய வீடியோ