முகாமில் தங்கியுள்ளோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
ஆத்துார்: ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் வசிஷ்ட, சுவேத நதிகளில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. அதில் வசிஷ்ட நதி கரையோரம் உள்ள, முல்லைவாடி, எம்.ஜி.ஆர்., நகர், என்.வி., நகர், தலைவாசல் எம்.ஜி.ஆர்., நகர் உள்ளிட்ட இடங்களில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் ஆத்துார், கெங்கவல்லி சட்டசபை தொகுதிகளில் உள்ள, 4 தாலுகாவிலும், 70க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், குடியிருப்புகள் சேதமடைந்த இடங்களை நேற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி ஆய்வு செய்தனர். தொடர்ந்து முகாம்களில் உள்ளவர்களுக்கு, நிவாரண பொருட்களை வழங்கி, பாதிப்பு குறித்து கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டனர்.எம்.எல்.ஏ., ஆறுதல்
பனமரத்துப்பட்டி, நெய்க்காரப்பட்டி ஊராட்சி பூலாவரி பாலம் அருகே ஆற்றோரத்தில் வீடு கட்டி பலர் வசிக்கின்றனர். அவர்களது வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அப்பகுதியை, அ.தி.மு.க.,வின், வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து, நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட உதவிகளை வழங்கி, ஆறுதல் கூறினார். மாற்று இடம், வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.