குடிநீர் இணைப்புக்கு கூடுதல் வசூல் ஊராட்சி தலைவரை கண்டித்து பதிவு
வீரபாண்டி: வீரபாண்டி ஒன்றியம் எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சியில், 'ஜல்ஜீவன்' திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. மற்ற ஊராட்சிகளில் இணைப்புக்கு டிபாசிட் மற்றும் 10 சதவீத பங்களிப்பு தொகை வசூலிக்கப்படும் நிலையில், எஸ்.பாப்பாரப்பட்டியில் மட்டும், அ.தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலர் பெருமாள் இணைந்து, வீடுகளுக்கு, 7,000 முதல், 15,000 ரூபாய் வரை வசூலிப்பதாகவும், அவர்களை மக்கள் சார்பில் கண்டிப்பதாக, சமூக வலைதளங்களில் ஒரு போஸ்டர் பதிவு செய்யப்பட்டிருந்தது.மேலும் கூடுதலாக வசூலித்த பணம், நேற்று ஊராட்சி அலுவலகத்தில் திருப்பி வழங்கப்பட உள்ளதால் அனைவரும் பெற்றுக்கொள்ளவும் என, பின்குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இதனால் சிலர் ஊராட்சி அலுவலகம் வந்து காத்திருந்தனர்.'பொய் குற்றச்சாட்டு'இதுகுறித்து தலைவர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, ''ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு. அரசு நிர்ணயித்த தொகை மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.ஒன்றிய பி.டி.ஓ., தனபாலிடம்(கி.ஊ.,) கேட்டபோது, ''இதுகுறித்து தலைவரிடம் கேட்டபோது, அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் பெற்றுள்ளதாகவும், 'சர்வர்' பிரச்னையால் சிலருக்கு ரசீது கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கூடுதல் கட்டணம் செலுத்தியதாக புகார் வந்தால் விசாரிக்கப்படும்,'' என்றார்.