உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொடுமுடியில் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்கள் அகற்றம்

கொடுமுடியில் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்கள் அகற்றம்

கொடுமுடி, ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காவிரி நீர்நிலை மற்றும் சாலை ஆக்கரமிப்புகளை அகற்றக்கோரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கடந்தாண்டு ஜனவரியில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, 90 நாட்களுக்குள் ஆக்கரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால் அதிகாரிகள் கால தாமதமாக, கடந்த டிசம்பரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். அதுவும் கிடப்புக்கு போனது. இதனால் பொதுநல வழக்கு தொடர்ந்தவர்கள், உயர் நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலை, வருவாய், மின்வாரியம் மற்றும் பேரூராட்சி துறை அதிகாரிகள் முன்னிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது.கொடுமுடி கடைவீதி, மகுடேஸ்வரர் கோவில் அருகில் மாட வீதி சந்து, காவிரி கரையோரத்தில் நீர்நிலை பகுதிகளில் இருந்த, 50 ஆண்டு பழையான திருமண மண்டபம், பழைய பள்ளி கட்டடம், பரிகார மண்டபம், வீடுகள் என பல்வேறு ஆக்கிரமிப்பு கட்டடங்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி இன்று (நேற்று) ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம். இலுப்பைதோப்பு, அண்ணாநகர் பகுதி ஆக்கிரமிப்பு குறித்து, வருவாய் துறை மூலம் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. அறிக்கை கிடைத்ததும் அங்கும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !