உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆத்துார்: ஆத்துார் அருகே அம்மம்பாளையம் ஊராட்சி, நரிக்குறவன் காலனியில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற, அப்பகுதியை சேர்ந்த விவசாயி வரதராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. கடந்த, 1ல், ஆத்துார் தாசில்தார் பாலாஜி தலைமையில் வருவாய்த்துறையினர், அளவீடு செய்தனர்.நேற்று வருவாய், பொதுப்பணித்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன், அளவீடு செய்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பொக்லைன் உதவியுடன் அகற்றினர். 4 ஏக்கர் அளவில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். குடியிருப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அதை தவிர்த்து மற்ற ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றினர்.இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், 'அளவீடு செய்தபோது, 18 பேர், 13.5 ஏக்கர் ஆக்கிரமித்தது தெரிந்தது. சிலர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதால் அந்த இடம், குடியிருப்பு வீடுகள் தவிர்த்து, மீதி, 4 ஏக்கர் அளவில் விவசாய நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. வரும் 14ல் மீண்டும் இப்பணி மேற்கொள்ளப்படும்' என்றார்.அதேபோல் கெங்கவல்லி அருகே கோனேரிப்பட்டியில் நேற்று, ஓடையை ஆக்கிரமிப்பு செய்திருந்த, 3 பேரிடம் இருந்து, 21 சென்ட் நிலத்தை மீட்டனர்.