பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கம் போராட்டம்
சேலம், நவ. 27-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், 3ம் கட்டமாக, பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டம், சேலம் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அருண்பிரகாஷ் தலைமை வகித்தார். இதுகுறித்து மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறியதாவது: 3 ஆண்டுகளுக்கு மேலாக, 2,000க்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதை உடனே நிரப்ப வேண்டும். துணை கலெக்டர் பட்டியல் மற்றும் நடப்பாண்டுக்குரிய மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, எங்கள் நிர்வாகிகளை அழைத்து பேசி, தமிழக அரசு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் திரளானோர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.அதேபோல் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசு உத்தரவை திரும்ப பெறுதல்; மக்களுடன் முதல்வர், உங்களை தேடி உங்கள் ஊரில், முதல்வரின் முகவரி திட்டங்களில் பெறும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம், போதிய நிதி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3ம் கட்ட போராட்டம், மேட்டூர் தாலுகா அலுவலகம் முன் நடந்தது. அலுவலக நுழைவாயில் முன் மேட்டூர் வட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் அமர்ந்து பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.ஓமலுார் தாலுகா அலுவலகம் முன், சங்க வட்ட தலைவர் ராமராஜன் தலைமையில், 15 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன், வட்ட தலைவர் குமார் தலைமையில், 12 பேர், பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைப்பாடி, சங்ககிரி தாலுகா அலுவலகங்களிலும், வருவாய்த்துறையினர் பணிபுரியாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜமாணிக்கம் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில், 30க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். சங்ககிரியில், தாலுகா கிளை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தாசில்தார் உள்ளிட்டோர், பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.