உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் ரவுடி வெட்டிக்கொலை போலீஸ் ஸ்டேஷன் அருகே கும்பல் வெறியாட்டம்

சேலத்தில் ரவுடி வெட்டிக்கொலை போலீஸ் ஸ்டேஷன் அருகே கும்பல் வெறியாட்டம்

சேலம், :துாத்துக்குடியை சேர்ந்த ரவுடி, சேலம், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று காலை கையெழுத்திட்டு, அருகே உள்ள ஹோட்டலில் மனைவியுடன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ரவுடியை, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த கொலையால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.துாத்துக்குடி, தந்தை பெரியார் தெருவை சேர்ந்த சாமுவேல் மகன் மதன், 28. மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர், ஆறு ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் மீது துாத்துக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனில், சில வழக்குகள் இருந்ததால், ரவுடி பட்டியலில் உள்ளார்.கடந்த ஏப்ரலில், துாத்துக்குடியில், கப்பல் மாலுமி மரடோனா கொலை வழக்கில் கைதாகி, நிபந்தனை ஜாமின் பெற்ற மதன், சேலம், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், கடந்த, 9ல், மனைவி மோனிஷாவுடன் சேலம் வந்த அவர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, விடுதியில் அறை எடுத்து தங்கினார். மறுநாள் முதல், அஸ்தம்பட்டி ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். நேற்றும், மனைவியுடன், அஸ்தம்பட்டி ஸ்டேஷனுக்கு வந்து, காலை, 10:00 மணிக்கு கையெழுத்திட்டார். தொடர்ந்து மணக்காடு, அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரே உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.அப்போது அந்த ஹோட்டலில் புகுந்த ஆறு பேர் கும்பல், வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், மதனின் தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர்.அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த மோனிஷா உள்ளிட்ட அனைவரும், அலறி அடித்து வெளியே ஓடினர். கை துண்டிக்கப்பட்டு, மூளை வெளியேறி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மதன் உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. தப்பியவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹோட்டல் அருகே வசிக்கும் பூங்கொடி கூறுகையில், ''இங்கிருந்து போலீஸ் ஸ்டேஷன், 100 அடி கூட இருக்காது. ஸ்டேஷன் அருகே கொலை நடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.காலை, 10:30 மணிக்கு, மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில், போலீஸ் ஸ்டேஷன் அருகே கொலை நடந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பழிக்குப்பழியாக நடந்த கொலை

போலீசார் கூறியதாவது: துாத்துக்குடியில் கப்பல் மாலுமி மரடோனா கொலை வழக்கில் ஜாமினில் வந்த மதன், 2019ல், துாத்துக்குடியை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவரின் ஆதரவாளர் ஒருவரை கொலை செய்தார். ஹரிபிரசாத்தின் ஆதரவாளர்கள், பழிக்குப்பழியாக, இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.மதன் மீது இரு கொலை உள்பட, 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, ரவுடி பட்டியலிலும் உள்ளார். அவரை கொலை செய்ய, 5 நாட்களாக கொலையாளிகள் சேலத்தில் தங்கி, மதனின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.சரியான நேரம் பார்த்து தற்போது தீர்த்துக்கட்டியுள்ளனர். ஹோட்டலில் இருந்த, 'சிசிடிவி' காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ