| ADDED : ஜூலை 09, 2024 06:22 AM
சேலம்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம், 3.5 கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பணத்தை இழந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.சேலம் மாவட்டம், நரசோதிப்பட்டி அருகே ஆதித்யா இன்டர்நேஷனல் என்ற பெயரில் அர்ஜுன் சுனில் ஆதித்யன் என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார். இதை நம்பி தமிழகம் முழுவதும், 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 3.5. கோடி ரூபாய் வரை பணம் கட்டி ஏமாந்துள்ளனர். பணத்தை இழந்த, 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: சேலம், நாமக்கல், கரூர், கோவை, பெரம்பலுார், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பொய்யான ஆவணங்களை காட்டி, இந்நிறுவனம் ஆஸ்திரேலியா, போலந்து நாடுகளில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி இளைஞர்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளது. பணத்தை கட்டிய மூவருக்கு போலி பாஸ்போர்ட் கொடுத்து, வெளிநாட்டிற்கு அனுப்பும் போது அவர்கள் டெல்லி வெளிநாட்டு துாதரகத்தில் கைது செய்யப்பட்ட பின்பே, தாங்கள் பணம் கட்டிய நிறுவனம் போலியானது தெரியவந்துள்ளது. பிடிபட்ட மூன்று இளைஞர்கள் அளித்த தகவல்படி, ஆதித்யா இன்டர்நேஷனல் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் சுனில் ஆதித்யன் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, நாங்கள் கட்டிய பணத்தை திருப்பித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.