மேலும் செய்திகள்
மாநகரில் இணைக்க ஊராட்சியில் எதிர்ப்பு
08-Aug-2024
பனமரத்துப்பட்டி: சேலம் அருகே, 45 லட்சம் ரூபாய் திருட்டு போன புகாரில், 4 மணி நேரத்தில் திருடர்களை போலீசார் வளைத்தனர். விசாரணையில், 42,000 ரூபாய் மட்டும் திருடு போனது தெரியவர, தவறான தகவல் தந்தவரை போலீசார் எச்சரித்தனர்.சேலம், தாசநாயக்கன்பட்டி பத்மாவதி நகரை சேர்ந்தவர் சரவணக்குமார், 54. சமையல் எண்ணெய் வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி உஷா, 49. வீட்டில் பலகாரம் செய்து விற்பனைக்கு அனுப்புகிறார். நேற்று காலை, 10:00 மணிக்கு சரவணக்குமார், வீட்டில் இருந்த, 45 லட்சம் ரூபாய் திருடுபோனதாக, மல்லுார் போலீசில் புகார் கொடுத்தார். 10:30 மணிக்கு, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து எஸ்.பி., கவுதம் கோயல், ஊரக டி.எஸ்.பி., தேன்மொழிவேல் உள்ளிட்டோர் வந்து விசாரித்தனர். தடய அறிவியல் போலீசார் ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து, மதியம், 2:00 மணிக்கு கொண்டலாம்பட்டி, காட்டூரில் இருந்த திருடர்கள், 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை நகர் ஹரிஹரன், 20, தாசநாயக்கன்பட்டி லட்சுமி நகர் விஜய், 19, எருமாபாளையத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் என தெரிந்து கைது செய்தனர். அவர்களிடம், 41,000 ரூபாய், இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சரவணக்குமாரிடம் திருடர்களிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது, 'இரு இடத்தில் பணம் வைத்திருந்தோம். ஒரு இடத்தில் இருந்த, 42,000 ரூபாய் மட்டும் திருடியுள்ளனர்' என, சரவணக்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, 'தவறான தகவல் அளித்து நேரத்தை வீணடித்தால் வழக்குப்பதிந்து கைது செய்து விடுவோம்' என, சரவணக்குமாரை கடுமையாக எச்சரித்து போலீசார் அனுப்பினர்.
08-Aug-2024