நங்கவள்ளி: வீட்டுமனை விற்பனைக்கு தடையாக இருந்த பஞ்.,ரோட்டை கபளீகரம்
செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர், ரோட்டை சீரமைத்து கொடுக்காததால் கிராம
மக்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம்,
ஆவடத்தூர் பஞ்.,சவரியூரில் இருந்து ஒரு கி.மீ.,தூரத்தில் உள்ள பாவாடை
செட்டியூர் கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
பஞ்.,சார்பில், சவரியூரில் இருந்து பாவாடை செட்டியூருக்கு மண் ரோடு
போடப்பட்டது.ஒரு ஆண்டுக்கு முன் சவரியூர்- பாவாடை செட்டியூர் ரோட்டோரம்
ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், 22 ஏக்கர் விவசாய நிலத்தை வீட்டுமனையாக
மாற்றினார்.ரோட்டை விட வீட்டுமனைகள் ஐந்தடி பள்ளத்தில் இருந்தது. அதனால்,
பஞ்., ரோட்டை கபளீரம் செய்து, ஐந்தடி வரை பள்ளமாக்கி, வீட்டுமனைகள் இருந்த
அளவுக்கு மட்டமாக மாற்றினார். அதை தொடர்ந்து, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்
ரோட்டை சீரமைத்து கொடுப்பார்கள் என, கிராம மக்கள் எதிர்பார்த்தனர்.ஆனால்,
நிலத்தை ஒட்டு மொத்தமாக வேறு ஒருவருக்கு விற்பனை செய்த ரியல் எஸ்டேட்
உரிமையாளர், கபளீரம் செய்த ரோட்டை சீரமைக்காமல் விட்டு விட்டார். அதனால்,
மழைகாலத்தில் ரோட்டில் தண்ணீர் குட்டை போல தேங்குவதாலும், ஓடை போல
செல்வதாலும் பொதுமக்கள் நடக்க முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
பாவாடை செட்டியூர் கிராம மக்கள் கூறியதாவது:நிலத்தை ஆக்ரமிப்பு செய்தால்
உடனடி நடவடிக்கை எடுக்கும் பஞ்., நிர்வாகம், ரோட்டையே தனிநபர் கபளீகரம்
செய்வதற்கு உடந்தையாக இருந்துள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.ரியல் எஸ்டேட் உரிமையாளர் கபளீகரம் செய்த ரோட்டை
மீண்டும் சீரமைக்க ஒன்றியம் சார்பில், 1.5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டது. அவர்களும், ஜல்லி கொட்டி விட்டு போய் விட்டனர். இதுவரை ரோடு
போட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், ஜல்லிகள் சுற்றி புதர்
மண்டிக் கிடக்கிறது.உடனடியாக ரோடு போட நடவடிக்கை எடுப்பதோடு, பஞ்., ரோட்டை
கபளீரம் செய்ய உடந்தையாக இருந்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆவடத்தூர் பஞ்., தலைவர் சிவசண்முகம்
கூறுகையில்,''ரியல் எஸ்÷ட்ட உரிமையாளர் ரோடு போட்டு கொடுத்து விடுவதாக
உறுதியளித்ததால்தான், தோண்டுவதற்கு சம்மதித்தோம். ஆனால், ஒரு ஆண்டுக்கு
மேலாக ரோடு போடாமல் ஏமாற்றுகின்றனர்,'' என்றார்.