| ADDED : செப் 21, 2011 01:05 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தை சுற்றியுள்ள, ஹோட்டல், டீக்கடைகளில் வாக்காளர் படிவங்கள், வடை, சுண்டல் பார்சல் செய்ய பயன்படுத்தப்படும் நிலை காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியாதவர்கள், உள்ளாட்சி தேர்தலிலாவது வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மாநகராட்சி, தாலுகா, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். பெயர் சேர்த்தலுக்கு எண் 6 படிவமும், நீக்கலுக்கு எண் 7 படிவமும், திருத்தம் மற்றும் இடமாறுதலுக்கு 8,8ஏ படிவங்களும், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான படிவங்களை வாங்கிச்செல்வோர், விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாமல் கிழித்தெறிந்து விடுகின்றனர். இந்த நிலையில், படிவங்கள் பல, ஹோட்டல்களிலும், டீக்கடைகளிலும் பார்சலுக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது. சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள டீக்கடையில், வாக்காளர் படிவங்கள் கிழிக்கப்பட்டு, சுண்டல் மடிக்கவும், வடை சாப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. வாக்காளர் படிவங்கள் மொத்தமாக டீக்கடைகளுக்கு வருவது பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.