சேலம் : சேலம் மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவுக்காஅல்லது தாழ்த்தப்பட்ட
பிரிவுக்கா என்ற முறையான அறிவிப்பு, மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்து
இதுவரை வெளியிடப்படாததால், சேலம் மாவட்ட, தி.மு.க.,வில், மேயர் வேட்பாளர்
யார் என்ற குழப்பம் நீடிக்கிறது. தாழ்த்தப்பட்டவருக்கு
ஒதுக்கும்பட்சத்தில், மேயர் ரேகாபிரியதர்ஷினியும், பொது பிரிவாக
மாறும்பட்சத்தில், முன்னாள் மேயர் டாக்டர் சூடாமணியும் போட்டியிட வாய்ப்பு
உள்ளது. தமிழகத்தில் உள்ள, 10 மாநகராட்சிக்கும், அ.தி.மு.க., தலைமையானது,
மேயர் வேட்பாளரை அறிவித்து, எதிர்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகராட்சி, தற்போது தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான ஒதுக்கீட்டில்
உள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் அறிவிப்பில்,
பொதுப்பிரிவைச் சார்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்து
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இட ஒதுக்கீடு அடிப்படையில் மாற்றம்
செய்யப்படும். அவ்வாறு இருக்க, தமிழக அரசு தன்னிச்சையாக இட ஒதுக்கீட்டு
முறையை மாற்றியுள்ளது என, எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சேலம்
மாவட்டத்தில், மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு என்பதால், தி.மு.க.,-
பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளில் குறைந்த எண்ணிக்கையிலே விருப்ப மனுக்கள்
பெறப்பட்டுள்ளன. அ.தி.மு.க.,வில் மட்டும், 60 பேர் விருப்ப மனு அளித்ததில்,
முன்னாள் துணை மேயர் சவுண்டப்பனுக்கு, போட்டியிடும் அதிர்ஷ்டம் கிடைத்தது.
அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில் யார் நிறுத்தப்படுவார் என்ற
எதிர்பார்ப்பு கட்சியினரிடத்திலும், மக்களிடத்திலும் உள்ளது.
தி.மு.க.,வில், ஒரு வாரமாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாநகராட்சி,
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக, 3,000 மனுக்கள் வரை பெறப்பட்டன.
அதில், மேயர் பதவிக்கு தற்போதைய மேயர் ரேகாபிரியதர்ஷினி உள்பட ஒன்பது பேர்
விருப்ப மனு அளித்துள்ளனர். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, 242 பேர் மனு
அளித்துள்ளனர். ஊரகப் பகுதிகளில், 2,500 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. விருப்ப மனுக்கள் அனைத்தையும், செல்வகணபதி எம்.பி., சென்னை
தி.மு.க., தலைமையகத்துக்கு எடுத்து சென்றார். தாழ்த்தப்பட்டோருக்கு, சேலம்
மேயர் பதவி ஒதுக்கும்பட்சத்தில், மேயர் ரேகாபிரியதர்ஷினி மீண்டும்
போட்டியிடலாம். பொதுப்பிரிவில், முன்னாள் மேயர் டாக்டர் சூடாமணி, மாநகர
செயலாளர் கலையமுதன், அவைத்தலைவர் சுபாஷ், துணை செயலாளர் குணசேகரன், துணை
மேயர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., வீரபாண்டி ராஜா, லோகநாதன்,
பகுதி செயலாளர் பாண்டிதுரை, தனஞ்செயன் உள்ளிட்டோர் பட்டியலில் உள்ளனர்.
மாவட்ட செயலாளர் என்ற முறையில் வீரபாண்டி ஆறுமுகம் பரிந்துரைக்கும்
நபருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம். அந்த வகையில், தாழ்த்தப்பட்ட
பிரிவில், மேயர் ரேகாபிரியதர்ஷினிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
பொதுப்பிரிவில், மாஜி அமைச்சருக்கு நெருக்கமான பாண்டிதுரை, தனஞ்செயன்,
லோகநாதன் ஆகிய மூவரில் ஒருவர், ராஜேந்திரன் தரப்பு கை ஓங்கும்பட்சத்தில்,
டாக்டர் சூடாமணி அல்லது சுபாஷூக்கு வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில்,
சேலம் மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவுக்கா, தாழ்த்தப்பட்ட பிரிவுக்கா
என்பதை தேர்தல் ஆணையம் வெளியிடும்பட்சத்தில் தான், சேலம் மாவட்ட,
தி.மு.க.,வில், மேயர் பதவி போட்டிக்கான குழப்பம் விலகும்.