மேட்டூர்: இறந்தவர்களின் ஆவி, ரோட்டில் விபத்தை ஏற்படுத்துவதாக நம்பும் பொதுமக்கள், கோழி பலியிட்டு விநோத பூஜை செய்கின்றனர்.சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன்மலை செல்லும்
நெடுஞ்சாலையோரம் கொளத்தூர், கருங்கல்லூர், காவேரிபுரம், சத்யாநகர்,
கோவிந்தபாடி உள்பட கிராமங்களும், குக்கிராமங்களும் உள்ளன.மேட்டூர்-
மாதேஸ்வரன்மலை மெயின்ரோட்டில், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர்
விபத்துக்குள்ளாகின்றனர். ரோட்டில், சில குறிப்பிட்ட வளைவுகளில் பலமுறை
விபத்து நடந்துள்ளது. டூவீலர்கள் செல்வோர் விபத்துக்குள்ளாவதற்கு, அந்த
பகுதியில் டமாடும் விபத்தில் இறந்தவர்களின் ஆவியே காரணம் என, கிராம மக்கள்
நம்புகின்றனர். எனவே, மீண்டும் விபத்து ஏற்படாமல் இருக்க
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், இரவு நேரத்தில் விபத்து நடந்த
இடத்துக்கு சென்று, கோழி பலி கொடுக்கின்றனர். பலி கொடுப்பதன் மூலம்,
மீண்டும் அப்பகுதியில் வாகனங்களில் சென்றால் விபத்து நடக்காது, என்று
அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.மேலும், இரவில் வாகனத்தில் செல்வோர்,
ரோட்டில் குறிப்பிட்ட இடத்தில் பயந்து காய்ச்சலில் படுத்து விட்டால்,
பரிகார பூஜை செய்வதன் மூலம், பயம் தெளிந்து குணம் அடைந்து விடுவதாகவும்
கிராம மக்கள் நம்புகின்றனர். அதனால், மேட்டூர்- மாதேஸ்வரன்மலை ரோட்டோரம்
இரவு நேரத்தில் பூஜைகள் செய்து, கோழி பலியிடுவதை காணமுடிகிறது.இது போன்ற
பூஜைகள் விபத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு திருப்தியை
அளித்தாலும், பகலில் ரோட்டில் செல்வோர், பீதியடையும் நிலை ஏற்படுகிறது.