ஆத்தூர்: உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி
தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க., அதிரடியாக அறிவித்துள்ளதால்,
நகர் மற்றும் கிராம பகுதிகளில் தேர்தல் விளம்பரம் எழுதும் பணிகளில்
அ.தி.மு.க.,வினர், தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழக உள்ளாட்சி தேர்தலில்
அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும், 10 மாநராட்சி மேயர் வேட்பாளர்கள்
முதலில் அறிவிக்கப்பட்டனர். அடுத்து, 52 நகராட்சி தலைவர்கள், மூன்றாவதாக,
72 நகராட்சி வேட்பாளர்கள் மற்றும் 70 பேரூராட்சி தலைவர் வேட்பாளர்களின்
பட்டியலையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.தி.மு.க.,-
தே.மு.தி.க., காங்கிரஸ் மற்றும் பா.ம.க.,- ம.தி.மு.க., உள்ளிட்ட
கட்சியினர், உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் இப்போதுதான்
விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். அதனால், அக்கட்சியினர் தேர்தல் பணிகளில்
தீவிரம் காட்ட முடியாமல் உள்ளனர்.அ.தி.மு.க., தன்னிச்சையாக வேட்பாளர்களை
அறிவித்துள்ளதால், கூட்டணியில் உள்ள தே.மு.தி.க., இந்திய கம்யூ.,
மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், விருப்ப மனுக்கள் பெற்ற நிலையில்,
வேட்பாளர்களை அறிவிக்காமல் 'மவுனம்' காத்து வருகின்றன.சேலம் ஆத்தூர்
நகராட்சி, நரசிங்கபுரம் நகராட்சி தலைவர், பெத்தநாயக்கன்பாளையம்,
ஏத்தாப்பூர், கீரிப்பட்டி, வீரகனூர், செந்தாரப்பட்டி, கெங்கவல்லி,
தம்மம்பட்டி, தொடாவூர் உள்ளிட்ட பேரூராட்சி தலைவர் வேட்பாளர்களை
அ.தி.மு.க., கட்சி தலைமை அறிவித்துள்ளது.அதனால், உற்சாகமடைந்துள்ள
அ.தி.மு.க.,வினர், சம்மந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில், சுவர்
விளம்பரம் எழுதுவதற்கு இடம் பிடித்து கட்சி சின்னம், வேட்பாளர்களின்
பெயர்களுடன் எழுதும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். தவிர, கட்சியின் அமைச்சர்,
எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகளையும், கட்சி சாராத முக்கிய
பிரமுகர்கள், அனைத்து ஜாதி சங்கங்கள், தொழிலாளர்கள் மற்றும் உள்ளிட்ட
நபர்களை, நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.ஆத்தூர், நரசிங்கபுரம்
நகராட்சி தலைவர் வேட்பாளர்கள் உமாராணி, மணிவண்ணன் ஆகியோர், கட்சி
நிர்வாகிகளுடன் நகர் பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பிலும், தேர்தல்
பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க.,வினர் சுவர் விளம்பரங்கள்
எழுதுவதால், தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.