உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியகோட்ட குடிநீர் வடிகால் வாரியநிர்வாக பொறியாளர் கைது

ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியகோட்ட குடிநீர் வடிகால் வாரியநிர்வாக பொறியாளர் கைது

சேலம்: மேட்டூர் அருகே, புதிதாக குடிநீர் குழாய் பதிக்க, ஒப்பந்ததாரரிடம், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர், நேற்று கைது செய்யப்பட்டார்.சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பெரியசோரகை கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (56). நங்கவள்ளி ஒன்றிய, அ.தி.மு.க., விவசாய அணி தலைவராக இருக்கும் இவர், குடிநீர் வடிகால் வாரியத்தில், 20 ஆண்டாக பதிவு பெற்ற ஒப்பந்ததாரராக உள்ளார்.ஓமலூர் தாலுகா, காடையாம்பட்டி ஒன்றியம், குண்டக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து, குப்பநாயக்கனூர் குடிநீர் தொட்டி வரை, புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கு, நந்தகோபால் விண்ணப்பித்துள்ளார். 10 சதவீதம் கமிஷன் கொடுத்தால், பணியை ஒதுக்கீடு செய்வதாக, சேலம் கோட்ட குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ரமேஷ் (56) தெரிவித்துள்ளார். பின், 7 சதவீத கமிஷன் கேட்டு கெடுபிடி செய்த அவர், தினமும் மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்டு, 50 ஆயிரம் ரூபாய் கொண்டு வரும்படி நெருக்கடி கொடுத்ததோடு, பணி உத்தரவு வழங்காமல் அலைகழித்துள்ளார்.இது பற்றி நந்தகோபால், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். போலீஸாரின் அறிவுரைபடி, நேற்று மாலை 5.15 மணியளவில், நிர்வாக பொறியாளர் ரமேஷை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, அவரிடம், 50 ஆயிரம் ரூபாயை நந்தகோபால் கொடுத்துள்ளார்.அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., சந்திரமவுளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், நடராஜன், ரங்கராஜன், செல்வகுமார் உள்பட போலீஸார் நிர்வாக பொறியாளர் ரமேஷை சுற்றி வளைத்து பிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ரமேஷை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் தங்கி இருக்கும் லாட்ஜில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.லஞ்சம் வாங்கி கைதான ரமேஷ், மதுரை, ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர். தற்போது, அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் பெங்களூரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை