இனி கைலாசநாதர் கோவிலில் பள்ளி அறை பூஜை
தாரமங்கலம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பள்ளி அறை பூஜை நேற்று நடந்தது. இதில் காலையில், பள்ளி அறை நாயனார், நாயகியை வைத்து, யாகவேள்வி செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு, 7:30 மணிக்கு மேல், சுவாமியை பல்லக்கில் வைத்து தீபாராதனை காட்டப்பட்டது.தொடர்ந்து பல்லக்கை துாக்கி, கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து, சுவாமியை பள்ளி அறையில் வைத்தனர். மேலும் சுவாமிக்கு நட்சத்திர ஆரத்தி காட்டி, தீபாராதனை காட்டப்பட்டபோது அங்கிருந்த பக்தர்கள், சுவாமியை பள்ளி அறை எதிரே இருந்த கண்ணாடியில் பார்த்து தரிசித்தனர். அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி, செயல் அலுவலர் ஜீவானந்தம் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல் கோவிலில் சுவாமிக்கு இரண்டு கால பூஜை நடந்து வந்த நிலையில், நேற்று முதல், 6 கால பூஜை நடந்தது. தொடர்ந்து கோவிலில் தினமும் பள்ளி அறை, 6 கால பூஜை நடக்கும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:கந்தசஷ்டியில் சூரசம்ஹார விழாவை தொடர்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்து பள்ளி அறையில் வள்ளி, தேவசேனா, முருகனை வைத்து பூஜை நடக்கும். அப்போது பள்ளி அறையில் இருந்த சுவாமியை, எதிரே உள்ள கண்ணாடியில் பார்த்து, பக்தர்கள் தரிசனம் செய்வர். பள்ளி அறையானது அப்போது மட்டும், ஆண்டில், 3 அல்லது 5 நாட்கள் திறந்திருப்பது வழக்கம். ஆனால் கோவிலில் பள்ளி அறை பூஜை, அனைத்து நாட்களும் நடந்ததா என தெரியவில்லை. பல நுாற்றாண்டுக்கு பின் தற்போது தான் நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.