டிராக்டர் லோன் வாங்க சென்ற விவசாயி தனிநபர் கடன் இருப்பதாக கூறியதால் அதிர்ச்சி
வாழப்பாடி:வாழப்பாடி, பொன்னாரம்பட்டி அருகே பரவக்காட்டை சேர்ந்த விவசாயி கார்த்திக், 41. இவர், 2016ல், ஆத்துாரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் உரிய ஆவணங்களை கொடுத்து பைக் கடன் பெற்றுள்ளார். 2019ல் கடன் முடிந்து, அதற்கான சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன், தனியார் வங்கிக்கு டிராக்டர் லோன் வாங்க சென்றபோது, மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் கார்த்திக் மீது தனி நபர் கடன், 1 லட்சம் ரூபாய் முறையாக செலுத்தாமல் அபராதத்துடன் இருப்பதாக, வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த கார்த்திக், 'நான் தனிநபர் கடன் ஏதும் பெறவில்லை' என கூறிவிட்டு, இதுகுறித்து விசாரித்தார். அப்போது, வாழப்பாடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், கார்த்திக் மீது தனிநபர் கடன் இருப்பது தெரிந்தது. அந்த நிறுவன ஊழியர்கள், முறையாக பதில் அளிக்காததால், நேற்று கார்த்திக் உள்ளிட்ட அவரது உறவினர்கள், அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து கார்த்திக் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.