பள்ளி நண்பர்களுடன் மோதல் மாணவர் துாக்கிட்டு தற்கொலை
அன்னதானப்பட்டி:பள்ளியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில், மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி, ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ஆனந்தன், பாத்திர வியாபாரி; இவரது மனைவி சண்முகபிரியா, மருத்துவர். இவர்களது மகன்கள் தயாக்கர், 13, விருபாகர், 6. தயாக்கர், குரங்குச்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தயாக்கர், வீட்டின் தனி அறையில் படித்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, சண்முகபிரியா எழுந்தபோது, தயாக்கர் அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அங்கு சென்று பார்த்தபோது, தயாக்கர் துாக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனந்தன் தகவல்படி, அன்னதானப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'பள்ளியில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில், மாணவர் தற்கொலை செய்திருப்பது, முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. பள்ளியில் விசாரணை நடத்தப்பட்ட பின், மேலும், விபரம் தெரிய வரும்' என்றனர்.