ெஹச்.எம்., - ஆசிரியை மீது நடவடிக்கைக்கு எதிராக மாணவ, மாணவியர் போர்க்கொடி
சேலம், சேலம், ஏற்காடு அடிவாரம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், நேற்று பெற்றோர்களுடன் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:பள்ளியில் தற்போது, 53 மாணவ, மாணவியர் படித்து வருகிறோம். அனுமதிக்கப்பட்ட, 14 ஆசிரியர் பணியிடத்தில், 5 பேர் மட்டுமே இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் பொறுப்பு வகித்த ஜெபஸ்டின் ராஜா, தஞ்சைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது மனைவியான ஆசிரியை மேரிபுஷ்பா, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பள்ளி மேலாண்மை குழுவினர் இடையே நிலவும் ஈகோ காரணமாக, பொய்புகாரில் இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், ஆசிரியர் எண்ணிக்கை, 3 ஆக குறைந்துவிட்டது.அடுத்த வாரம், 2025 -26 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் நிலையில், ஆசிரியர் பற்றாக்குறையால், எங்களின் கல்வித்தரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து, தலைமை ஆசிரியரை மீண்டும் இதே பள்ளிக்கு இடமாற்றம் செய்வதுடன், 'சஸ்பெண்ட்' ஆசிரியரை உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.பள்ளி மேலாண்குழு துணைத்தலைவி பூங்கொடி கூறுகையில், ''நான், யாருக்கும் புகார் அனுப்பவில்லை. என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி இருப்பதாக, விசாரணையின் போது தெளிவுப்படுத்தி இருப்பதால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.