அளவீடுக்கு ரூ.10,000 லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது
ஆத்துார்:பட்டா பெயர் மாற்ற, நில அளவீடு பணிக்கு, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சர்வேயர், உதவியாளரை, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்துார், துலுக்கனுாரை சேர்ந்த விவசாயி குமரேசன், 56. இவரது வீட்டு மனை இடத்தை அளவீடு செய்து, தனி பட்டா பெற, ஆத்துார் தாலுகா அலுவலகம், நில அளவை பிரிவு அலுவலக சர்வேயர் ஜீவிதா, 32, என்பவரை அணுகியுள்ளார். அந்த வேலைக்கு 12,000 ரூபாய் லஞ்சம் தரும்படி, ஜீவிதா, அவரது உதவியாளர் கண்ணதாசன், 41, ஆகியோர் கேட்டு, பேரம் பேசினர். பின், 10,000 ரூபாய் தரும்படி கூறினர். இதுகுறித்து, குமரசேன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து அவர்களின் அறிவுரைப்படி, நேற்று மாலை, 5:00 மணிக்கு, குமரேசன், 10,000 ரூபாயை, அவரது அலுவலகத்தில் வைத்து, ஜீவிதாவிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த, இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையிலான போலீசார், ஜீவிதா, கண்ணதாசனை, கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.