ரூ.78 லட்சத்தில் வேளாண் கருவிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கல்
சேலம்:சேலம் கலெக்டர் அலுவலகத்தில், பழங்குடியினர் நலத்துறை சார்பில், தொல்குடி ஐந்திணை திட்டத்தில், பழங்குடியினர் விவசாய சங்கங்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் விழா, நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வேளாண் இயந்திரங்களை வழங்கி பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், கிழக்கு பூர்வமலை பழங்குடியின விவசாயிகள் மேம்பாடு சங்கங்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கெங்கவல்லி வட்டம் வாழக்கோம்பை, மூக்காகவுண்டன்புதுார், சேலம் வட்டத்தில் அடிமலைப்புதுார் பகுதிகளை சேர்ந்த பழங்குடியினர் விவசாய சங்கங்களுக்கு இயந்திர தளவாட பொருட்கள், தொல்குடி திட்டத்தில், 78.82 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்க நடவடிக்கை எடுத்து, தற்போது முதல் கட்டமாக, 6 டிராக்டர், 5 ரோட்டாவேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், மகேந்திரா டெக் பிளஸ், சாப் கட்டர், நெல் வைக்கோல் சுருட்டும் இயந்திரம், பேட்டரி ஸ்பிரேயர், தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம், மினி டிராக்டர், தீவன கலவை, தாவரம் கலவை மற்றும் அரைத்தல், பாக்குத்தட்டு தயாரிக்கும் இயந்திரம், தானியங்கி அரைக்கும் இயந்திரம் ஆகியவை வழங்கப்படும். அதனால் சங்க விவசாயிகள், இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.