பாரம்பரிய இசை கருவி கண்காட்சி தொடக்கம்
பாரம்பரிய இசை கருவி கண்காட்சி தொடக்கம்வீரபாண்டி, செப். 20-சேலம், தளவாய்பட்டி ஆவின் பால்பண்ணை எதிரே அரசு இசைப்பள்ளி உள்ளது. அங்கு குரலிசை, தவில் உள்பட, 7 பிரிவுகளில், 13 முதல், 25 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பாரம்பரிய இசை கருவிகள், புகைப்பட கண்காட்சியை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று திறந்து வைத்தார்.எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், நாதஸ்வர கலைஞர்கள் ராஜரத்தினம்பிள்ளை, காரைக்குடி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், ஓதுவார் மூர்த்திகள் தர்மபுரம் சாமிநாதன், திருத்தணி சாமிநாதன், பரத கலைஞர்கள் பத்மா சுப்ரமணியம், வைஜெயந்தி மாலா, இசை கலைஞர்கள் லால்குடி ஜெயராமன், குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும்படி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தவிர பாரம்பரிய இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு, செயல்முறை விளக்கம் காட்டப்படுகிறது. ஏராளமான மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். இதில் கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகன், தலைமையாசிரியர் சங்கரராமன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். நாளை வரை கண்காட்சி நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை பார்வையிடலாம்.