விநாயகர் சிலை, பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கடைவீதியில் போக்குவரத்து பாதிப்பு
சேலம், விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பூக்கள் விலை, இரு மடங்கு உயர்ந்தது. கடைவீதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, விதவித பிள்ளையார் சிலைகள், அதை அலங்கரிக்க தேவையான எருக்கம் பூ மாலை, அருகம்புல், மாவிலை, வாழை மரங்கள், பூஜைக்கு தேவையான தேங்காய், பழம், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க, சேலம், சின்ன கடைவீதி, தேர்வீதி, வ.உ.சி., மார்க்கெட் பகுதிகளில் நேற்று ஏராளமானோர் குவிந்ததால், காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூக்கள் விலை எகிறியதுகுறிப்பாக, அரை அடி முதல், 10 அடி வரை, பல்வேறு விதங்களில் உள்ள சிலைகளை, 150 முதல், 10,000 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் பூக்கள், பழங்கள் விலை அதிகரித்தது. கடந்த வாரம் குண்டுமல்லி கிலோ, 800க்கு விற்ற நிலையில், நேற்று, 1,600 முதல், 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், 700க்கு விற்ற சன்ன மல்லி, 1,400 முதல், 1,500 ரூபாயாகவும், 150க்கு விற்ற அரளி, 250 முதல், 300 ரூபாய்; 200க்கு விற்ற சாமந்தி பூ, 300 முதல், 400 ரூபாய் வரை அதிகரித்தபோதும், மக்கள் வாங்கி சென்றனர். மேலும் பழங்கள் விலையும் கிலோவுக்கு, 100 முதல், 150 ரூபாய் வரை உயர்ந்தது. பூஜை பொருட்களை வாங்க, ஏராளமானோர் குவிந்ததால், கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.