ரயில் விபத்தில் மீட்பு பணி பேரிடர் மீட்பு குழு ஒத்திகை
ரயில் விபத்தில் மீட்பு பணிபேரிடர் மீட்பு குழு ஒத்திகைபெ.நா.பாளையம், நவ. 16-ரயில் விபத்து ஏற்பட்டால் அதன் மீட்பு பணி குறித்து தெற்கு ரயில்வே, பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை செய்து காட்டினர்.சேலம் மாவட்டம் ஆத்துார் வழியே, சேலம் - விருதாசலம் அகல ரயில் பாதை செல்கிறது. மின் வழிப்பாதையாக உள்ள நிலையில் பயணியர், எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இதனால் ரயில்கள் விபத்து, மீட்பு பணி, பாதுகாப்பு குறித்து, ஏத்தாப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், தெற்கு ரயில்வே மற்றும் பேரிடர் மீட்பு குழு சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பயணியர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும்போது, மற்றொரு ரயில் மீது மோதி விபத்து ஏற்படுவது, தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விழுவது, பெட்டிக்குள் தீ விபத்து ஏற்படுவது குறித்து தத்ரூபமாக செயல் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்து காயம் ஏற்பட்டவர்களை மருத்துவ குழு, பேரிடர் மீட்பு குழு மூலம் மீட்டு சிகிச்சை அளித்தல், இறந்தவர்கள் உடல்களை மீட்பது பற்றி செயல்விளக்கம் அளித்தனர்.மேலும் ரயில் பாதையை கடந்து செல்வது, மின் பாதையில் உள்ள ஆபத்துகள், ஆளில்லா ரயில்வே கேட் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சேலம் ரயில்வே கோட்ட அலுவலர் பகத்சிங், ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் ஜெயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.