மாடு முட்டியதில் முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் பலி
ஆத்துார்: எருதாட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில், இருவர் பலியாகினர்.காணும் பொங்கலையொட்டி சேலம் மாவட்டம் ஆத்துார் அடுத்த செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நேற்று நடந்தது. வாடிவாசல் அமைத்து, காளைகளை அவிழ்த்து விட்டனர். அனுமதியின்றி நடந்ததை அறிந்து, கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர், தம்மம்பட்டி போலீசார் வந்து, எருதாட்டத்தை நிறுத்தினர்.இதையடுத்து, தே.மு.தி.க.,வை சேர்ந்த, செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் மணிவேல், 43, அவரது காளையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். தெற்கு சத்திரம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது, அவரது காளை மிரண்டு, மணிவேல் கழுத்தில் கொம்புகளால் குத்தியது. ரத்த வெள்ளத்தில் மணிவேல் துடிதுடித்து உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பார்வையாளர் உயிரிழப்பு
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ராசாண்டர் திருமலையில் (ஆர்.டி.மலை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டு போட்டியை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். மொத்தம், 770 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் அரசு விதிமுறைகளின்படி பதிவு செய்து பங்கேற்றனர். திருச்சி மாவட்டம் குழுமணி பஞ்.,க்குட்பட்ட சமுத்திரம் பகுதியை சேர்ந்த குழந்தைவேலு, 65, ஜல்லிக்கட்டு காண வந்திருந்தார். மாலை, 3:30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை ஒட்டியுள்ள, சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, ஓடி வந்த காளை முட்டியதில் குழந்தைவேலு பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.