நிலத்தை அளக்க ரூ.25,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது
ஆத்துார்;தலைவாசல் அருகே நிலம் அளவீடுக்கு, 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் மகேந்திரன், 40; விவசாயியான இவர், தன் நிலத்தை அளவீடு செய்து, பாகப்பிரிவினை செய்வதற்காக, வேப்பம்பூண்டி வி.ஏ.ஓ., ராமசாமி, 51, என்பவரை அணுகியுள்ளார். அவர், நிலம் அளவீடு செய்வதற்கு, 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மகேந்திரன் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில் வி.ஏ.ஓ., ராமசாமி, மகேந்திரனின் தோட்டத்திற்கு தனியார் நில அளவையர்களை அழைத்து சென்று, 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கினார். மறைந்திருந்த போலீசார், ராமசாமியை கையும், களவுமாக கைது செய்தனர். விசாரணையில், தலைவாசல், கிழக்கு ராஜாபாளையத்தைச் சேர்ந்த ராமசாமியின் நிலம் அளவீடு பணிகளை சர்வேயர் வைத்து அளக்காமல், தனியார் நில அளவை நபர்களை வைத்து அளந்து, அவர்களுக்கு, 5,000 ரூபாய் கொடுத்துவிட்டு, மீத பணத்தை ராமசாமி பெற்று வந்தது தெரிந்தது.