சந்துக்கடையில் மதுபாட்டில் விற்பனை செய்பவரிடம் மாமூல் கேட்டு பேசிய வீடியோ வைரல்; எஸ்.ஐ., மாற்றம்
தலைவாசல்: சந்துக்கடையில், மதுபாட்டில் விற்பனை செய்யும் நபரிடம், மாமூல் பேரம் பேசிய வீடியோ வைரலான நிலையில், எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 35. இவர், அதே பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி வந்து, சந்துக்கடையில் கூடுதல் விலைக்கு விற்று வருவதாக தெரிகிறது. இவரிடம், வீரகனுார் ஸ்டேஷன் எஸ்.ஐ., கருப்பண்ணன், மொபைல் போனில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், செந்தில்குமார், 'தினமும் 30 மதுபாட்டில் விற்பதால், கட்டுப்படியாகவில்லை. இதற்காக, 1,500 ரூபாய் தருகிறேன் சார்' என்கிறார். அதற்கு எஸ்.ஐ., கருப்பண்ணன், 'வழக்கு சம்பந்தமாக கணினி உள்ளிட்டவைகளுக்கு, 2,500 ரூபாய் கொடுக்க வேண்டும்' என்கிறார். செந்தில்குமார், '30 பாட்டிலுக்கு, 1,000 ரூபாய் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். மீதம் 500 ரூபாய் தருகிறேன்' என்கிறார். ஆனால், எஸ்.ஐ., கருப்பண்ணன், 'இத்தொகையை ஏற்க முடியாது' என்று, அவரது போன் இணைப்பு துண்டித்து விடுகிறார். சந்துக்கடை நடத்துபவரிடம், மாமூல் பேரம் பேசிய இவர்களது மொபைல் போன் உரையாடல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், ''எஸ்.ஐ., பணம் கேட்பதுபோன்ற வீடியோ வந்துள்ளதால், அவரிடம் விசாரணை செய்வதற்காக, இன்று (நேற்று), சேலம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக அந்த நபரிடம், பணம் கேட்டார் என்று, விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.